Friday 1 November 2013

இன்னும்..........


எணங் குறியான் இயல்குறியான் ஏது நினையாதே
      என் பாட்டுக் கிருந்தேன் இங்கெனை வலிந்து நீயே 
மணம் குறித்துக் கொண்டாய் நீ கொண்டது தொட்டேனது 
      மனம் வேறு பட்டதில்லை, மாட்டாமையாலே 
கணங் குறித்துச் சிலப் புகன்றேன் புகன்ற மொழி எனது 
     கருத்தில் இலை உன்னுடைய   கருத்தில் உண்டோ, உண்டாயில் 
குணம் குறிப்பான் குற்றம் ஒன்றுங் குறியான் என்று அறவோர் 
     கூறிடும் அவ்வார்தை இன்று மாறிடுமே அரசே !

நாயகரே உமது வசம் நான் இருக்கின்றது போல் 
     நாடிய தத்துவத் தோழி நங்கையர் என்வசத்தே 
மேயவர் ஆகாமையினால் அவர் மேல் அங்கெழுந்த 
    வெகுளியினால் சிலப் புகன்றேன் வேறு நினைத்தறியன் 
"தூயவரே  வெறுப்பு வரில் விதி வெறுக்க என்றார் 
    சூழ் விதித்தாரை வெறுத்திடுதல் அவர் துணிவே 
தீயவர் ஆயினும் குற்றம் புரியாது  புகன்றால் 
    தீ மொழி  அன்றெனத் தேவர் செப்பியதும் உளதே "

நாம் யாரையாவது திட்டிவிட்டோம் என்றால் நாம் பேசிய வார்த்தைகளை  நாமே  மறந்து விடுவது நம்மின் சிலருக்கு வழக்கம் . ஆனால் நம்மிடம் திட்டு வாங்கியவர் மறந்து விடுவாரா என்றால் கண்டிப்பாக அவரால் மறக்க முடியாது. மறக்க முடியாமல் இருப்பவரிடம் போய், "திட்டின  நானே மறந்துட்டேன் நீ போய் நினைவில் வெச்சிக்கலாமா " என்று கேட்ப்பதுதான் சரியா, அல்லது அதுதான்  முறையாகுமா ? திட்டு வாங்கின அவனுக்கு வலிக்குமா, திட்டின நமக்கு மனசு வலிக்குமா என்றால் அதிகம் அவனுக்குத்தான் வலிக்கும்.
அவனுக்குத்தான் நம்மின் வார்த்தைகள் ஒவ்வொன்றும் நினைவில் இருக்கும் "நான் மறந்துட்டேன், நீ நல்லவன், மற்றவர்களின் குணத்தை மட்டும் தான் பார்ப்பே , குற்றத்தை கண்டுக்க மாட்டேன் என்று  அறவோர்கள் சொல்றாங்களே அது பொய்யாகப் போய்விடுமே !" என்று இறைவனைப் பார்த்து வள்ளலார் கேட்க்கின்றார்.
எவ்வளவு எளிதாகவும் எளிமையாகவும் வார்த்தைகளை கையாண்டு, பாமரர்களுக்கும், இறைவனை மிகமிக எளிமையானவனாக காட்டி , நீயும் அவனை காணலாம் , உன்னாலும் அவனை அடைய முடியும் என்பதனை இப்படி பலப் பாடல்கள் முலம் எடுத்துக்காட்டி இருக்கிறார் நம் வள்ளல் பெருமான் அவர்கள்.