Sunday 24 March 2013

நாம்


   நம்மின் மனம் எப்படிப்பட்டது ? அது எப்படி யெல்லாம் நம்மை ஆட்டிப்படைக்கின்றது? நாம் அதைப்பற்றி நினைக்காதே என்றால் அதைப் பற்றித்தான் நினைக்கும். நினைவில் வைத்துக்கொள் என்றால் மறந்துவிடும். ஆசையை விடு என்றால் அதிகமான ஆசையை வளர்த்துக்கொள்ளும் . இப்படி நம் புத்தி சொல்வதைக்  கேட்கவே கேட்காது.  வள்ளலார் ஒரு பாடலில் சொல்லுவார்,
 உலகத்தில் குரங்கை எல்லாரும் ஆடவைக்கின்றார்கள் என்று கேள்விப்பட்டிருக்கின்றேன். ஏன் ஆடவைத்தும்  பார்த்திருக்கின்றேன். ஆனா இந்த மனம் என்கிற கிழக்குரங்கு இப்படி என்னை ஆட்டிப் படைக்கின்றதே! நிரம்பவும் வியப்பக்குறியதாக இருக்கின்றதே!

இதோ அந்தப் பாடல்
                                     தேட்டக்கண்டோர்  மொழிபாகா உலகில் சிலர் குரங்கை
                                     ஆட்டக்கண்டேன் அன்றி  அக்குரங்கால் அவர் ஆடச்சற்றும்
                                     கேட்டுக் கண்டேனிலை  நான்ஏழை நெஞ்சக் கிழக்குரங்கால்
                                      வேட்டுக்கொண்டாடுகின்றேன் இது சான்ற வியப்புடையதே


இப்படியும் இருக்கலாம்

இப்படியும் இருக்கலாம்


குறித்துரைக்கின்றேன்  இதனைக் கேண்மின் இங்கே வம்மின்
          கோணும் மனக்குரங்காலே நாணுகின்ற உலகீர்
வெறித்த உம்மால் ஒருபயனும் வேண்டுகிலேன் எனது
           மெய் யுரையைபொய்  யுரையாய் வேறு நினையாதீர்
பொறித்தமதம்  சமயம்எலாம் பொய் பொய்யே  அவற்றில்
            புகுதாதீர் சிவம் ஒன்றே பொருள் எனக் கண்டறிமின்
செறித்திடு சிற்  சபைநடத்தைத்  தெரிந்து துதித்திடுமின்
             சித்திஎலாம் இத்தினமே சத்தியம் சேர்ந்திடுமே

வள்ளலார்  ஏன் சத்தியமெல்லாம் போடுகின்றார். தான் அடைந்த சுகங்களை மற்றவர்களும் அடையவேண்டும் என்ற நல்ல உயர்ந்த நோக்கத்தால் தான். "உங்களால் எனக்கு ஒரு உதவியும் ஆக வேண்டியது ஒன்றும் இல்லை. அதாவது உங்களிடமிருந்து நான் ஒரு உதவியும் எதிர்பார்க்கவில்லை. அதனால் என்னுடைய உண்மையான  வார்தைகளை பொய்யுரை என்று நினைத்து விடாதீர்கள். மனிதர்களால் வகுக்கப்பட்ட மதமும், சமையங்களும் பொய்யானது. முற்றிலும் பொய்யானது . அவற்றில் போய் மாட்டிக் கொள்ளாதீர். சிவம் ஒன்றே  பொருள் என்று உணர்ந்து ஞான சபை நடனத்தை தெரிந்து துதித்திடுங்கள். எல்லா நன்மைகளும் கண்டிப்பாக அதே நாளில் வந்து சேர்ந்திடும்" நெறிமாறி செல்லும் இந்த மனமெனும் குரங்கினால்  மருண்டுப்போயிருக்கும் நாமக்காகத்தான் இதனை சொல்கின்றேன். என்ற பொருள் படும் வார்த்தைகள்  தான் " குறித்துரைக்கின்றேன்  இதனைக் கேண்மின் இங்கே வம்மின் கோணும் மனக்குரங்காலே நாணுகின்ற............."

முன்னுரை

முன்னுரை
                       வள்ளலார் 5818க்கும் மேற்ப்பட்ட  பாடல்களும், 200 க்கும்  மேற்ப்பட்ட தனிப்பாடல்களும் அடங்கிய  திருவருட்பா என்ற மாமறையை அருளியிருக்கின்றார். அவற்றில் 25 அல்லது அதிகபட்சமாக ஒரு 50 பாடல்கள் மட்டுமே பாடப்பட்டும், பேசப்பட்டும் வருகிறது . நம்மின் நலனுக்காகவும், நம்மின் மேன்மைக்காவும் பாடப்ப்ட்டப்  பாடல்கள்  ஒராயிரம். அதிலும் நம்மின் நிறைக்குறைகளை சுட்டிக்காட்டி சுய ஆய்வு என்னும் மாபெரும் உள்நோக்குப் பயணத்திற்கும் வழி வகுத்துக்கொடுக்கின்றார். சிலப்பாடல்களில் நம்மை நினைத்து தன்னை கடிந்துக்கொள்வதன் மூலமும் நமக்கு உணரவைப்பார் . ஏன் இப்படி செய்கின்றார் என்றால் நாமும் அவரைப்போன்று மரணமிலாப் பெருவாழ்வு வாழ வேண்டும். அது மட்டுமல்ல அவரடைந்த சுகத்தினை நாமும் அனுபவிக்கவேண்டும் என்ற உயரிய எண்ணத்தால்.
மிகமிக எளியமுறையில் பாமரர்களும் புரிந்துக்கொள்ளும் பாடல்களை அருளியிருப்பார்.

  நான் பலப்பாடல்களை படிக்கும் போது என்னை சிந்திக்கவும், திகைக்கவும், நெகிழவும், உறையவும்  வைத்தன . இவற்றையெல்லாம் எல்லாரும் படித்து  இன்புற வேண்டும், பயனடைய வேண்டும் என்பதே என்னுடைய ஆவல்.

வள்ளலார் வாக்கு
" யானடையும் சுகத்தினை நீர் தான் அடைதல் குறித்தே"